23 மே 2017

எம்மதமும் சம்மதமே!


மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் ''எம்மதமும் சம்மதம்'' என்ற தலைப்பிலான மத ஒற்றுமைக் கவிதை  தங்களுக்காக.........


 எம்மதமாயினும் சம்மதம்

கோபமும் கொதிப்பும் குமுறிடும் படிபல
       கொடுமைகள் நடக்குது வடநாட்டில்
தாபமும் தவிப்பும் தந்திடும் ஆயினும்
       தமிழா! உன்குணம் தவறிடுமோ?       1

அன்னிய மதமென அடிக்கடி பழகிய
       அயலுள மக்களைக் கொல்லுவதை
என்னென உரைப்பது ஏதென வெறுப்பது
       எண்ணவுங் கூடத் தகுமோதான்?       2

வேறொரு மதமென அண்டையில் வசிப்பவர்
       வீட்டினைக் கொளுத்துதல் வீரமதோ?
ஆறறி வுடையவர் மனிதர்கள் என்றிடும்
       அழகிது தானோ? ஐயையோ!       3

பிறிதொரு மதமெனப் பெண்மையைக் கெடுப்பதும்
       பிள்ளையை மடிப்பதும் பேய்செய்யுமோ?
வெறிதரும் நெறிகளை விலக்கிய உன்குணம்
       விட்டிடப் படுமோ? தமிழ் மகனே!       4

அங்குள வெறியர்கள் அப்படிச் செய்ததில்
       அவசரப் படுத்திடும் ஆத்திரத்தால்
இங்குள சிலர்எதிர் செய்ய நினைப்பதை
       எப்படித் தமிழ்மனம் ஒப்பிடுமோ?       5

தீமையைத் தீமையால் தீர்க்க நினைப்பது
       தீயினைத் தீயால் அவிப்பதுபோல்
வாய்மையின் தூய்மையின் வழிவரும் தமிழா!
       வஞ்சம் தீர்ப்பதை வரிப்பாயோ?       6

அடைக்கலம் புகுந்தன அன்னிய மதம்பல
       அன்புள்ள நம்தமிழ்த் திருநாட்டில்
கொடைக்குணம் மிகுந்தநம் குலத்தவர் காத்தனர்
       கொள்கையை நாம்விடக் கூடாது.       7

வேற்றுமை பலவிலும்  ஒற்றுமை கண்டிடும்
வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு
மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம்
 மதமெனக் கொண்டவர் தமிழர்களே . 8

எம்மதம் ஆயினும் சம்மதம்  என்பதை
ஏந்தி நடப்பது தமிழ்நாடு
அம் மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில்
அசைந்திடலாமோ தமிழறிவு?9

மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை
மாநிலம் இன்னமும்  சகித்திடுமோ?
விதவிதம் பொய் சொல்லி வெறுப்பினை வளர்த்திடும்
வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம்.10


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...