01 ஏப்ரல் 2015

பெண் குழந்தை திருமணம் செய்யாதீங்க!.


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். குழந்தை திருமணமா?
          புத்தகப்பைகளை சுமக்க வேண்டிய வயதில், பிள்ளைச்சுமையை வயிற்றில் ஏற்கும் பரிதாப நிலைக்கு, இன்றைய வளர் இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தை திருமணத்தால், பலரின் வாழ்க்கை, பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது. தமிழகத்தில், 28 சதவீதம் குழந்தை தாய்மார்கள், பிரசவகாலத்தில் உயிரை இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர். பெண்ணுக்கான திருமண வயது, 18, ஆணுக்கான திருமண வயது, 21 என்பதை, அதிகாரிகள் முழங்கினாலும், அவற்றை காதில் வாங்காமல், கடமை முடிந்தது என, நினைக்கும் பெற்றோர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தியாவில் நிலவும் சமுதாயப் பிரச்னைகளில் ஒன்று குழந்தை திருமணம். பீகார், உத்திரபிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், சண்டிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், இன்றும் பருவம் வந்த உடனேயே, திருமணத்தை நடத்தி வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. தாய்மையை ஏற்கும் வயதில்லாத நிலையில், அதிகப்படியான வயதுடையவரை, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடுமை, வடமாநிலம் மட்டுமின்றி, தென் மாநிலங்களிலும் அதிகம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில், கல்வியறிவில்லாத கிராமத்தைச் சேர்ந்தோர், குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, குழந்தை திருமணம் முக்கிய காரணம். இதற்கு உதாரணமாக, இந்தியாவில் ஆண்டுக்கு, 25 ஆயிரம் வரதட்சணை இறப்புகளும் (வெளியே தெரியாதவை தனி), 5,000 கவுரவ கொலைகளும் நடப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப தாய், சேய் மரணத்துக்கும், முக்கிய காரணமாக குழந்தை திருமணம் உள்ளது. இந்தியாவில் சிசு மரணம், ஒரு லட்சம் மகப்பேறில், 301, தமிழகத்தில் ஒரு லட்சம் மகப்பேறில், 111 என்றளவில் உள்ளது. 20 முதல், 24 வயதில் திருமணம் புரிவோருடன் ஒப்பிடுகையில், மகப்பேறு மரணம், 15 முதல், 19 வயதுக்குள் ஐந்து மடங்காக உள்ளது. 

 குழந்தை திருமணத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, வறுமை, போதிய கல்வி அறிவில்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப சுமையாக கருதுவது, இடம் பெயர்ந்து வாழும் நிலை, சமூகத்தில் பெண்ணை அடிமைப்படுத்துவது, வரதட்சணைக் கொடுமை, குறைந்து வரும் பாலின சதவீதம், பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, விழிப்புணர்வு இல்லாதது, சிறுமிகள், இளைஞர்களிடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றிய புரிதல் இல்லாமை உள்ளிட்டவையாகும். இவ்வகை திருமணங்களால், பெண்ணுக்கு கல்வி தடைபடும், தன்னம்பிக்கை குறையும், அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்து பற்றாக்குறை, இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சியில்லாதது, பிரசவத்தின்போது தாய், சேய் மரணமடையும், எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை பிறக்கும், ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடையும், நோய் மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும். குடும்பத்தை வழிநடத்த முடியாமல், குழந்தைகள் பணிக்கு செல்லும் நிலை ஏற்படும். குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலைக்கு ஆளாகிவிடுவர். அவர்களதுகுழந்தைகள் அநாதைகளாக சாலையில் திரியும் நிலையை உருவாக்கும். தற்போதைய நிலையில், பெண் பிறப்பு தடுக்கப்படுவதால், ஆண், பெண் எண்ணிக்கை வேறுபாடு அதிகம் உள்ளது. திருமண வயதுடைய ஆண்களுக்கு, பெண்கள் கிடைக்காத சூழலும் உள்ளது. இளம் வயது திருமணத்தை தவிர்க்க, பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குழந்தை திருமணங்களை தடுக்க, பெண் குழந்தைகளை மேல்படிப்புக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இளம் வயது திருமண பாதிப்புகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் சமபங்கு அளித்தல், ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் மதிப்பு, மரியாதை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவியரிடத்தில் இத்தகவல்களை தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் நடப்பது தெரியவந்தால், தங்கள் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., பஞ்சாயத்து தலைவர், போலீஸ், சமூக நல அலுவலர், மாஜிஸ்திரேட், 

குழந்தைகள் நல உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம், புகார் தெரிவிக்கலாம். இளைஞர்கள் சமூக சேவையாக கருதி, கிராமப்புறங்களில், கல்வியறிவற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். யார், யாருக்கு காப்பு...: குழந்தை திருமணத்தை நடத்திய இரு தரப்பு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாப்பிள்ளை, திருமணத்தை நடத்தும் புரோகிதர், பூசாரி, நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினர், முன்னின்று நடத்தும் சமுதாய தலைவர்கள், நிச்சயித்த நபர்கள், அமைப்புகள், புரோக்கர்கள், சமையலர் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும், குழந்தை திருமண தடைச்சட்டம், 2006ன்படி குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமினில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப ஒன்றோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தை திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அத்திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.

இந்திய திருமணச் சட்டம் ஒரு பார்வை: கடந்த,1891ம் ஆண்டு பெண்ணுக்கு, குறைந்தபட்ச திருமண வயது, 12 என ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றியது. மரபுக்கு எதிரானது என மக்கள் எதிர்த்தனர். 1929ம் ஆண்டு, பெண்ணுக்கு ,15 வயது, ஆணுக்கு, 18 வயது என்ற நிலை வந்தது. ஆனால், அந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 1948ல், இந்தியாவில் பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து தன் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய உரிமை உள்ளது என்ற சட்டம் வந்தது. 1955ல் இந்து திருமணச் சட்டம் மற்றும் மனவிலக்கு(விவகாரத்து) சட்டம் கொண்டு வரப்பட்டது. திருமணம் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது. பலதார மணம் சட்டத்துக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டது. 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில், திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இச்சட்டங்கள் இருந்தபோதும், 50 சதவீதத்துக்கு மேல், 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

- தின மலர்  சிறப்பு நிருபர் அவர்களுக்கு நன்றிங்க.. -


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...